
துர்கையம்மன் கோயில்
துர்கையம்மனுக்கு தனி கோவில்
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தில் துர்கையம்மனுக்கு என்று தனி கோவில் உள்ளது.
சரஸ்வதி கோயில்
கூத்தனூர் சரஸ்வதி கோவில்
தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு என்றே தனியாக கோவில் உள்ள தலம் கூத்தனூர்தான்.மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்னும் ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. கருவறையில் சரஸ்வதிதேவி வெள்ளை நிற ஆடை தரித்து,வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள்.கீழ் வலது கையில் சின்முத்திரை,கீழே இடது கையில் புத்தகமும்,வலது மேல் கரத்தில் அட்சர மாலையும்,இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.
கருவறையின் முன் சரஸ்வதியின் வாகனமான ராஜஹம்சம் எனப்படும் அன்னம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது.பௌர்ணமி அன்று இந்த அன்னைக்கு தேன் அபிஷேகம் செய்து அந்த பிரசாத தேனை, சரஸ்வதியை நினைத்து உட்கொள்ள,கல்வி அறிவு பெருகும் எனபது ஐதீகம்..
மகிஷாசுரமர்த்தினி கோயில்
கசக்காத வேப்பிலை பிரசாதம்
திருத்தணிக்கு அருகில் உள்ள மத்தூர் என்னும் ஊரில், மகிஷாசுரமர்த்தினி கோவில் இருக்கிறது.இக்கோவில் வேப்பமரத்தின் இலைதான் பிரசாதம்.இந்த வேப்பிலை கசக்காது எனபது குறிப்பிடத்தக்கது .

கொப்புடைய நாயகி அம்மன் கோயில்
மூலவரே உற்சவராகவும் இருக்கும் அம்மன்
காரைக்குடியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் மூல விக்கிரகமே திருவிழாக்களின் போது உற்சவ விக்கிரகமாக எடுத்துச் செல்லப்படுகிறது
மாரியம்மன் கோயில்
மூலிகைகளால் ஆன சமயபுரம் மாரியம்மன் திருமேனி
சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் திருமேனியானது சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது. இந்த அம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி உடையவர். இவ்வளவு பெரிய மூலிகைகளால் ஆன திருமேனியுள்ள அம்பிகை வேறு எந்த ஆலயத்திலும் இல்லை.
வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
தாமரைப்பூவில் தாள் பதித்த வண்ணம் காட்சி தரும் துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கதிராமங்கலம் திருத்தலம். இங்குதான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி சிம்மவாஹினியாக மகிஷாசுரனை பாதத்தில் வதைத்த வண்ணம் திருக்காட்சி தருவாள்.ஆனால் கதிராமங்கலத்தில் கிழக்கு நோக்கி, அருளையும் பொருளையும் வாரி வழங்கும் மகாலஷ்மி அம்சமாக தாமரைப் பூவில் தாள் பதித்த வண்ணம், வலது மேற்கரத்தில் தீவினையறுக்க பிரத்யேக சக்கரம், இடதுமேற்கரத்தில் சங்கு, வலது கீழ்க்கரத்தில் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் இடுப்பில் வைத்த எழிலான பாவனையுடன் அருளாட்சி புரிகிறாள். இது மிக அபூர்வ அமைப்பாகும்.
மீனாட்சி அம்மன் கோயில்
மரகதக் கல்லால் ஆன அம்மன்களின் விசேடச் சிறப்பு
மதுரை மீனாட்சி அம்மனும் சென்னை அருகே புழல் பக்கத்தில் உள்ள சிறுவாபுரி உண்ணாமுலை அம்மனும் மரகதக் கல்லால் ஆனவர்கள்.இத்தகைய மரகதக்கல்லால் ஆன அம்மனை வணங்கினால் புதன் கிரகத்தின் அருள் கிடைத்து கல்வியும் ஞானமும் வளரும் என்பது ஐதீகம்.
காஞ்சனமாலை கோயில்
மதுரை மீனாட்சி அம்மனின் தாயார் கோவில்
மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனின் தாயார் பெயர் காஞ்சனமாலை.இவருக்கென்று மதுரை எழுகடல் தெருவில் தனி ஆலயம் இருக்கின்றது.அம்பாளின் அன்னைக்கு என்று தனி ஆலயம் இடம்பெற்றுள்ள ஒரே தலம் மதுரைதான்.
காமாட்சி அம்மன் கோயில்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் தனிச்சிறப்பு
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அம்பாளுக்கென்று தனி சன்னதி கிடையாது.காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்தான் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் பொதுவான அம்பாள் சன்னதியாக கருதப்படுகிறது.